ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை விட்டுத்தர முடியாது: அரசுடன் மல்லுக்கட்டும் தீபா!
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை விட்டுத்தர முடியாது: அரசுடன் மல்லுக்கட்டும் தீபா!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் அவரது நினைவிடமாக மாற்றப்படும் என அவரது மரணத்திற்கு பின்னர் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இதற்காக கையெழுத்து இயக்கம் கூட ஆரம்பித்தார்.
இந்நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற உள்ளதாக கூறினார். பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். போயஸ் கார்டன் வேதா நிலையம் எங்கள் பூர்வீக சொத்து, அதனை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும் என் சகோதரர் தீபக்கும்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள். வேதா நிலையம் ஜெயலலிதாவின் தாயும், எனது பாட்டியுமான சந்தியாவால் வாங்கப்பட்டது. எனவே, வேதா நிலையத்தை விட்டுத்தர மாட்டோம்.
எங்களிடம் இருந்து எந்த கருத்தையும் அரசு தரப்பில் இருந்து கேட்கவில்லை. நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக்கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா? பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலையில் இருப்பதால் ஆட்சியை தக்கவைக்க எதை எதையோ செய்கிறார் என கூறினார்.