நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த திமுக தோழமை கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி பகிர்வில் இன்னும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுகவும் தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை முடுக்கியுள்ளது.
இந்நிலையில் திமுக தலைமையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்து கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் வழங்கிய அளவிலேயே சீட்டுகளை வழங்கலாம் என திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தோழமை கட்சிகள் கடந்த முறையை விட கொஞ்சம் அதிக சீட்டுகளை எதிர்நோக்கி காய் நகர்த்தி வருகின்றன. விசிக சமீபத்தில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்திய பின்பு கூடுதல் தொகுதிகளுக்காக தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான திமுகவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை உள்ளிட்ட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில தொகுதிகள் கூடுதலாக வழங்கும்படி கேட்டுள்ளார்களாம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான் என்பதால் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து அவர் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நகர்வே இருக்கும் என திமுக வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.