கோடநாடு கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது அண்ணன் தனபால் இப்போது கோடநாடு கொலை & கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நிலமோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள அவர், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கோடநாட்டில் நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததுதான். என்னுடைய தம்பி கனகராஜ் சாலைவிபத்தில் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
25 கோடி ரூபாய் தருவதாக சொன்னதால் கனகராஜ் கோடநாட்டில் இருந்து 5 பைகளை எடுத்து வந்து தந்துள்ளார். ஆனால் அதை பட்டுவாடா செய்வதில் எழுந்த பிரச்சனை காரணமாக கனகராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் இந்த சம்பவத்தில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும்” எனக் கூறியுள்ளார்.