டிடிவி தினகரன் எனது காலில் விழுந்தார்: திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி!
டிடிவி தினகரன் எனது காலில் விழுந்தார்: திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி!
திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவின் காலில் விழுந்து பதவியை பெற்றார் என டிடிவி தினகரன் கூறிய கருத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
மேலூர் பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசியபோது, இப்போது இருக்கும் இந்த அரசு சசிகலாவால் உருவாக்கப்பட்டது எனவும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காதீர்கள் எனவும் கூறினார். அதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது ஒரு விபத்து எனவும் அவரை முதல்வராக்கியது சசிகலா எனவும் கூறினார்.
இதற்கு நேற்று பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி சூழல் காரணமாக முதல்வராகவில்லை, சசிகலாதான் சூழல் காரணமாக பொதுச்செயலாளர் ஆனார். எங்களை ஏற்றிவிட்ட ஏணி அம்மா மட்டுமே என கூறினார்.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த கருத்துக்கு இன்று பதில் அளித்த தினகரன், சசிகலாவை விமர்சிக்கும் திண்டுக்கல் சீனிவாசன் அவரால் பெற்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசட்டும். அவர் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளன, எடுத்துவிட்டால் அவருக்குத்தான் அசிங்கம் என பேசினார்.
திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவின் காலில் விழுந்தது குறித்து கடலூரில் எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், நான் சசிகலாவின் காலில் விழுந்தது மரியாதை நிமித்தமாகத்தான். தினகரன் துணைப் பொதுச்செயலாளராக பதவி ஏற்றதும் எனது காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார். நான் காலில் விழுந்த புகைப்படத்தை வெளியிடுவது தினகரனின் விருப்பம் என்றார்.