முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக அறிவித்தது.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பக்கம் சென்றுவிட்ட நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தற்போது நடந்துவருகிறது.
தற்போது தினகரன் பக்கம் மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர் பக்கம் இருந்த அதிமுக எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் எடப்பாடி அணியுடன் இணைந்துவிட்டனர்.
தற்போது, திண்டுக்கல் எம்பி உதயக்குமார், வேலூர் எம்பி செங்குட்டுவன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
கோகுலகிருஷ்ணன் மற்றும் விஜிலா சத்யானந்த் ஆகியோரிடம் கேட்கப்பட்ட போது, இரட்டை இலை சின்னம் இருக்கிற இடத்தில் தான் நாங்கள் இருப்போம் என்று பதிலளித்தனர். இதே காரணத்தால் தற்போது மெலும் இரண்டு எம்பி-க்கள் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளனர்.
மேலும், மீதம் இருக்கும் 13 எம்பி-க்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பார்களா அல்லது அணி தாவுவார்களா என இன்னும் சில தினங்களில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.