தூத்துக்குடி தொகுதியில் பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான வ கவுதமன் போட்டியிட இருக்கிறார்.
வர இருக்கும் நாடளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலானக் கூட்டணிகள் ஏறத்தாழ உருவாகியுள்ளன. அதையடுத்து இப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும் அதிமுகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 5 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் சில தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக மாறுவது வழக்கம். ஒருக் கட்சியின் பிரபலமானத் தலைவர் போட்டியிடும் தொகுதி அல்லது இரண்டு எதிர்க்கட்சிகளில் மிகப் பிரபலமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ஆகியவைத் தேர்தல் களத்தில் மிகவும் கவனம் பெறும். அதுபோல இந்தாண்டு தூத்துக்குடித் தொகுதி மிகுந்த கவனம் பெறும் தொகுதியாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏனென்றால் ஏறகனவே திமுக சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. கனிமொழியும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் போட்டியிட இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்போது புதியதாக ஒரு வேட்பாளராக தமிழ் பேரரசு கட்சியின் தலைவர், இயக்குனர் கவுதமனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பலப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் கவுதமன். இதனால் அங்குள்ள போராட்டக்காரர்கள் கவுதமனை தேர்தலில் நிற்க அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து யோசித்துவரும் கவுதமன் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.