விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் தோப்பூர் கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான ஜெயசூர்யா, தர்மராஜா கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான முனைவர். தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் போன்றோர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த சிலைகள் விஜயநகரப் பேரரசு கால மற்றும் நாயக்கர் கால நடுகற்கள் என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் கூறியதாவது:
வில்வீரன் நடுகற்கள்: தோப்பூர் கிராமத்தின் கிழக்கு திசையில் சத்திரம் புளியங்குளம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு அய்யனார் கோவில் காணப்படுகிறது. இந்த கோவிலில் தான் மூன்று வில்வீரன் நடுகற்கள் காணப்படுகின்றன. இதில் முதல் வில்வீரன் சிற்பமானது 3 அடி உயரத்தில் ஒன்றரை அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் தனது இடது கையில் வில்லைப் பிடித்து தனது வலது கையால் அம்பை நாணில் வைத்து எய்யும் விதமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்ப வடிவமைப்பை பார்க்கும்போது விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பமாக கருதலாம்.
இந்த சிற்பம் காணப்படும் இடத்தில் அருகருகே இரண்டு வில்வீரன் சிற்பங்கள் தங்களது மனைவிகளுடன் வடிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வில்வீரர்கள் ஏதேனும் பூசலில் இறந்திருக்கலாம்.
அவர்களது மனைவிகள் கணவர் இழந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறியிருக்கலாம். இவர்களது தியாகத்தை போற்றும் விதமாக நடுகல் எடுத்துள்ளனர்.
இதை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதி வகை நடுகற்களாக கருதலாம். மேலும் வீரக்கல் சிற்பமும் காணப்படுகிறது.
இந்த சிற்பம் மூன்றடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வீரர்களும் வாள்,குத்தீட்டி போன்ற ஆயுதங்களை தாங்கிய வண்ணம் கம்பீரமான தோற்றத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
இவர்களது தலைக்கு மேலே நாசிக்கூடு செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் சிற்பமும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
பாவை விளக்கு: அய்யனார், பூர்ணகலா, புஷ்கலா உடன் சிற்பமாக வீற்றிருக்கும் சன்னதியின் அருகே பாவை விளக்கு கற்ச்சிற்பம் இடம்பெற்றுள்ளது.
கோவிலில் மூன்று பாகை விளக்கு சிற்பம் காணப்படுகிறது. பெரிய அளவில் உள்ள கோவில்களில் மட்டுமே காணப்படும் இந்த பாவை விளக்கு சிற்பம் இக்கோவிலில் காணப்படுவதை பார்க்கும் போது இங்கு முற்காலத்தில் பெரிய கோவிலில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறலாம். இந்த கோவிலில் நந்தி, குழந்தைசிற்பம் போன்றவைகளும் சிறப்பான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது என்றும் இது போன்ற பழமையான நடுகற்களை இனங்கண்டு வரலாற்றை மீட்டெடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அவர்கள் கூறினர்.