தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைப்பாரா? அல்லது தோல்வி அடைந்து மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்துவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'அதிமுக ஆட்சி செயல்படாத அரசாக இருப்பதாக் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே திமுக எம்.எல்.ஏக்கள் 89 பேர்களும் வாக்களிப்போம்' என்று கூறியுள்ளார். ஏற்கனவே திமுக எடுக்கும் முடிவைத்தான் காங்கிரசும் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் நிச்சயம் அதிமுக எம்.எல்.ஏக்களே அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு இருப்பதால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில்தான் முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.