கொரோனா வைரஸூக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் பலர் தங்களுடைய அவசிய தேவை குறித்து மனுக்கள் மூலம் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் கொடுத்த 1 லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் ஒப்படைத்தனர். தயாநிதி மாறன் தலைமையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களை சந்தித்து திமுக எம்.பி.க்கள் இந்த மனுக்களை அளித்தனர்
இந்த நிலையில் தலைமை செயலாளரிடம் மனுக்களை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்பி அவர்கள் கூறியபோது, ‘திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை பார்த்து தலைமைச் செயலாளருக்கு பொறாமை என்றும், எம்.பி.க்களை மதிக்காமல் டிவி பெட்டியில் சத்தத்தை அலறவைத்து அதை கவனித்துக்கொண்டு இருந்தார் என்றும் அதிர்ச்சியான பரபரப்பான புகாரை கூறினார்.
மேலும் உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை'' என தலைமைச் செயலாளர் கூறியதாகவும், தலைமைச்செயலர் சண்முகம் இந்த வார்த்தையை கூறியதை கேட்டு அதிர்ந்துபோனோம் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.