சோனியா, ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிந்த்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததால் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபின் எஸ்.பி.ஜி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் ஏறக்குறைய 3,000 எஸ்.பி.ஜி அதிகாரிகள் பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இனி அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று கூடிய மக்களவையில் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுகவினர் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
வெளிநடப்பு செய்வதை மட்டும்தான் திமுகவினர் சரியாக செய்வதாவும், எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது மக்களுக்காக பேசாமல் கூட்டணி கட்சிக்காக பேசி வெளிநடப்பு செய்வது சரியானதாக இல்லை என்றும் கிண்டலாகவும், கோபமாகவும் சமூக வலைத்தள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.