Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சிங்கப்பூரில் முடியும்போது தமிழகத்தில் முடியாதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

சிங்கப்பூரில் முடியும்போது தமிழகத்தில் முடியாதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!
, ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (12:20 IST)
தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட தூய்மை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டில் முடியாதா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் குழாய்கள் மூலம் ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட மிகவும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் குழாய்களிலும், பொது குடிநீர் குழாய்களிலும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதை விட சுவையான, தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் செய்தி தான்.
 
உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தான் மிகவும் தரமான குடிநீர் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டன் நகரில் கழிப்பறையில் வரும் தண்ணீரை கூட பருகும் அளவுக்கும் மிகவும் சுவையாகவும் தூய்மையாகவும் இருக்கும். தான் சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, விடுதி அறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கழிப்பறையில் உள்ள குழாயில் குடிநீரை பிடித்து குடிக்கலாம் என்று கூறினர். அந்த அளவுக்கு தூய்மையான நீர் வழங்கப்படுகிறது.
 
தற்போது  அந்த நகரங்களில் வழங்கப்படுவது போன்ற தூய்மையான ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட குடிநீர் பூரி நகரில் இப்போது குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இத்தகைய தரமான குடிநீரை குழாய்களில் வழங்கும் முதல் நகரம் பூரி நகரம் ஆகும். ஒடிசாவில் மேலும் 17 நகரங்களில் இதே போல் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது
 
ஒடிசாவை விட அதிக வளர்ச்சியும், வலிமையான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பமும் கொண்ட தமிழ்நாட்டில் அது இன்னும் சாத்தியமாகவில்லையே என்ற சலிப்பும், வருத்தமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இத்தகையத் திட்டம் சாத்தியமாகாததற்கு பொருளாதாரமோ, தொழில்நுட்பமோ காரணம் அல்ல. மாறாக தொலைநோக்கு பார்வை இல்லாததே காரணம். 
 
மேலும், ஒடிசா  மாநிலத்தில் இந்த அற்புத திட்டத்தை செயல்படுத்தியவர் ஒரு தமிழர் தான். ஒடிசாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக பணியாற்றி வரும் தமிழகத்தின் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரி ஜி.மதிவதனன் என்பவர் தான் இத்திட்டத்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அதிகாரி ஆவார். ஒடிசா மாநில குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் சிலரை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்கு குடிநீரை தூய்மைப்படுத்தி வழங்கும் முறை குறித்து பயிற்சி பெற்று வரச் செய்த மதிவதனன், அந்த அதிகாரிகள் மூலம் தான் திட்டத்தை செயல்படுத்த வைத்திருக்கிறார்.
 
பூரிக்கு அருகில் உள்ள பார்கவி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து தூய்மைப்படுத்தி தான் இனிக்கும் குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் வழங்கப்படும் இந்த நீரை யார் வேண்டுமானாலும் ஆய்வகங்களில் சோதித்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தத் திட்டத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் செயல்படுத்தலாம்
 
தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்ல என்றும் பாதுகாப்பப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வழங்கப்படுவது குடிப்பதற்கு தகுதியானதாக இல்லை. சென்னை போன்ற நகரங்களில் குடிநீர் என்ற பெயரில் வழங்கப்படும் தண்ணீர் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. குடிப்பதற்காக கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்குவதற்காக மட்டும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 வரை செலவழிக்கின்றன. ரூ.25,000 கொடுத்து சுத்திகரிக்கும் எந்திரம் வாங்கினால் கூட ஆண்டுக்கு ரூ.8,000 வரை பராமரிப்புச் செலவாகிறது. ஆனாலும் தரமான குடிநீர் கிடைப்பதில்லை
 
ஒடிசாவில் செயல்படுத்துவது போன்ற திட்டத்தை   தமிழ்நாட்டிலும் செயல்படுத்தினால், குடிநீருக்காக  மக்கள் செலவழிக்கும் பணத்தில் ரூ.20,000 கோடி வரை ஆண்டுக்கு மிச்சமாகும் என்றும்  தூய்மையான குடிநீர் வழங்குவதால் நோய்கள் ஏற்படாது. மக்களின் வாழ்நிலையும், ஆரோக்கியமும், பொருளாதாரமும், அவற்றின் பயனாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் வெகுவாக அதிகரிக்கும்.
 
குடிநீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் குடிநீரை இலவசமாகவும் அதற்கு மேல் பயன்படுத்தும் தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கலாம்.தூய்மையான குடிநீர் குழாய்களில் கிடைத்தால் பாட்டில் குடிநீர் பயன்பாடும், அதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதும் குறையும். தண்ணீரே இல்லாத சிங்கப்பூரில் கூட, தூய்மைக் குடிநீர்  திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாதா என்ன? எனவே ஒடிசாவில் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது போன்று ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும் 
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!