கோடை மழையில் நனைந்து பாழான 20000 நெல் மூட்டைகள் குறித்து தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உழவர்களால் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த 20,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் நனைந்து பாழாகியுள்ளன. அதனால் உழவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட உழவர்கள் கண்ணீர்விடும் நிலை உருவாகியுள்ளது!
போத்திரமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக உழவர்கள் கடந்த 5 நாட்களாக காத்திருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதனால் தான் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழடைந்துள்ளன. குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாதது தான் அனைத்து பாதிப்புகளுக்கும் காரணம் ஆகும்!
தமிழ்நாட்டில் எந்த நெல் கொள்முதல் நிலையமாக இருந்தாலும், அங்கு நெல்லை விற்பனை செய்வதற்காக உழவர்கள் 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எந்தவொரு கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகளை மட்டுமே சேமித்து வைக்கும் அளவுக்கு இட வசதி இருப்பதால் அதற்கு மேல் கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்!
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5000 மூட்டைகள் சேமித்து வைக்கப்படும் அளவுக்கு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையும் 4000 ஆக உயர்த்தப்பட வேண்டும். மழையில் நனைந்த 20,000 நெல் மூட்டைகளையும் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் பாழடைந்த நெல் மூட்டைகளுக்குரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்!