லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கீத் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம் அங்கீத் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.