மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து நடந்த நிலையில் இதுகுறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
அது மட்டுமில்லாமல் ரயிலில் பயணித்த பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும், ரயில் தீ விபத்தில் இறந்த பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு மத்திய-மாநில அரசின் நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன்.