ஈரோடு தொகுதி எம்.பி.கணேசமூர்த்தி உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது, அதன் விளக்கு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகளின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அந்த மின் கோபுரங்களின் கீழ் விவசாயப் பணிகளில் ஈடுபட்டாலோ அல்லது அதன் அருகில் சென்றாலோ, மின்காந்த புலன்கள் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, நேற்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே மூணாம்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகள் புகார் அளித்தது போல் மின் கோபுரங்களின் கீழ் மின்சாரம் பாய்கிறதா? என்பதை கண்டறிய உடனே டெஸ்டரை, தன்னுடைய உடலில் வைத்து பார்த்தார்.
உடனே டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்து மின்சாரம் பாய்கிறது என்பதை காட்டியது. அடுத்த நொடியே அதனை புகைப்படம் எடுத்துகொண்டார்.இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எம்.பி.கணேசமூர்த்தி, மின் கோபுரங்களின் கீழ் நின்றால் மின்சாரம் பாய்கிறது என்பது உண்மைதான் என்றும், தான் டெஸ்டரை வைத்து தன்னுடைய உடலில் வைத்து பார்த்தால், மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது என்றும் கூறினார்.
மேலும் அவர், இதனை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும், இது குறித்த புகைப்படங்களை பாராளுமன்றத்தில் காட்டி பேசவுள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.