தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து தினகரன் பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். அதிமுக ஆட்சியும் எந்த ஆபத்தும் இன்றி தப்பியுள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தினகரன் தலைமையில் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏக்கள் மதுரையில் ஆலோசனை நடத்தி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்தனர். அதன்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் 3 வது நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். பிரிந்து சென்றவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுகவிலிருந்து விலகி தினகரன் பக்கம் சென்று, பல பிரச்சனைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு சென்று எடப்பாடி-ஓபிஎஸ் தரப்புக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் எனக்கருதியே 18 எம்.எல்.ஏக்களுக்கும் இந்த அழைப்பை எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு விடுத்திருப்பதாக தெரிகிறது.