நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் டிடிவி தினகரனுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும், மக்களிடம் தனக்கு மவுசு இருப்பதையும், அதிமுக இன்னும் தன் பக்கமே இருக்கிறது எனவும் அவர் காட்டியுள்ளார். எனவே, பல அதிமுக நிர்வாகிகள் தினகரன் பக்கம் சாயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு, அதை தடுக்கும் வகையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவாளர்களை நீக்கியுள்ளனர்.
எனவே, அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், அவர்களுக்கு மீண்டும் பதவிகள் கொடுக்கும் வகையிலும், டிடிவி தினகரன் ஒரு பேரவையை தொடங்க இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. அதன்பின் அவர் அரசியல் கட்சி தொடங்கி, அதிமுகவை கைப்பற்றும் முடிவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உளவுத்துறை முதல்வரிடம் அளித்த அறிக்கை படி மொத்தம் 15 அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் தொடர்பில் இருப்பதாகவும், சூழ்நிலை வரும் போது அவர்கள் அணிமாற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சியைடந்துள்ள எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நேற்று நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், இதுபற்றி பேசியுள்ளனர். எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி “உங்களில் சிலர் தினகரனுடன் தொடர்பில் இருப்பதும், அவரை ரகசியமாக சந்திப்பதும் எனக்கு தெரியும். இது சரியல்ல. அவர்தான் நம்முடைய எதிரி. நம் பக்கம் அவரின் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அப்படி யாரும் இல்லை எனக்கு தெரியும். இனிமேல் அவரை யாரும் சந்தித்து பேச வேண்டாம்” என கேட்டுக்கொண்டாராம்.