தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை கட்சிக்கு வைத்ததற்கான காரணத்தை நடிகர் விஜய் இன்றைய மாநாட்டு பேச்சில் விளக்கி உள்ளார். ஒரு ஒட்டு மொத்த கூட்டத்தை உணர்ச்சியோடு உச்சத்தில் வைக்கிற சொல், நாடி நரம்புகள் எல்லாம் உணரக்கூடிய சொல் என்றால் அது வெற்றி. எனவே, மிச்சம் மீதி இல்லாமல் செய்து முடிக்க மனதுக்குள் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற, வாகை சூடுவது என்ற சொல் தான் வெற்றி. அந்த 'வெற்றி' என்ற சொல்லைதான் கட்சியின் இரண்டாவது வார்த்தையாக நாங்கள் வைத்துள்ளோம்.
அடுத்ததாக, 'தமிழகம்' என்பதற்கு தமிழர்களின் அகம், அதாவது தமிழர்கள் வாழும் இடம் என்று சொல்லலாம். புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட பல இலக்கியங்களில் 'தமிழகம்' என்ற வார்த்தை உள்ளது. தமிழை ஆழமாக ஒழுங்காக படித்த நிறைய பேர் நமக்கு சொல்லிக் கொடுத்த வார்த்தை என்பதால்தான் 'தமிழகம்' என்ற பெயரை நாங்கள் முதல் வார்த்தையாக வைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணா அதனால்தான் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார்.
மூன்றாவதாக, 'கழகம்'. கழகம் என்றால் சிங்கங்கள் பயிலும் இடம் என்று அர்த்தம். நமது இளைஞர்கள் என்ற சிங்கங்கள் இருக்கும் இடம்தான் கழகம். எனவேதான் நம் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்ற மூன்றாவது வார்த்தைகளைக் கொண்டு வைத்துள்ளோம்.
அடுத்ததாக, 'பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் வார்த்தையும் சேர்த்து நம் கட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. இனி வரப்போகிற நாட்களில், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் தமிழ்நாட்டின் வெற்றிக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் வெற்றிக்கும் அடித்தளமாக்கி, தமிழ்நாட்டை உலகத் தமிழர்களின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாற்றுவோம் என்று விஜய் பேசினார்."