சென்னையில் சாலை விபத்தில் பலியான இளம்பெண்ணின் மரணத்திற்கு, தனது மாமனார் மற்றும் மைத்துனரே காரணம் என காவல் அதிகாரி ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் துளசிங்கம். இவரின் மனைவி இறந்து விட, இவரது மகள் ரம்யா(28), யானைக்கவுனியில் உள்ள அவரது தாத்தா, அதாவது துளசிங்கத்தின் மாமனார் ரத்தினத்தின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த வீடு தொடர்பாக துளசிங்கத்திற்கும், ரத்தினத்திற்கும் இடையே ஏற்கனவே சொத்துப்பிரச்சனை இருந்துள்ளது. எனவே, அந்த வீட்டை விட்டு செல்லுமாறு ரத்தினம் தரப்பில் ரம்யாவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதை மறுத்த ரம்யா அந்த வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். திருமணம் ஆகாத ரம்யா, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில், பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் ரம்யா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வாகனம் செண்டரல் அருகே வால்டாக்ஸ் சாலையில் சென்ற போது, அவருக்கு பின்னால் வந்த ஒரு டாட்டா 407 மினிவேன் அவரது வாகனத்தில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ரம்யாவுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த பழனி(49) என்கிற நபரை போலீசார் கைது செய்து அவர் மீது விபத்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், இது விபத்து அல்ல. தனது மகளை தனது மாமனார் ரத்தினம் மற்றும் மைத்துனர் ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என ரம்யாவின் தந்தையும், காவல் அதிகாரியுமான துளசிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.