வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில், மர்ம நபர்கள் நிதி நிறுவன அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில், சூர்யா போலி வருமான வரித்துறை போல் நடித்து பெரும் புள்ளிகளின் வீடுகளில் கொள்ளையடிப்பார்.
அதேபோல் காஞ்சிபுரம் இந்திரா நகரில் குமரவேல் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மாமியார் சரஸ்வதியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை குமரவேல் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வருமான வரித்துறையினர் என்ற பெயரில் டிப்-டாப் உடை அணிந்த 5 வாலிபர்கள் குமரவேல் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குமரவேலின் மாமியாரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். அவரது போனையும் அவர்கள் பிடிங்கி வைத்துக் கொண்டனர்.
குமரவேலின் மாமியாரை யோசிக்கக் கூட விடாத அந்த போலி வருமான வரித் துறையினர், வீட்டிலிருந்த 50 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு, குமரவேலை காஞ்சீபுரம் அலுவலகத்துக்கு வரும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த குமரவேலிடம் நடந்தவற்றை கூறியுள்ளார் சரஸ்வதி. இதனால் அதிர்ச்சியடைந்த குமரவேல் இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது சோதனையில் ஈடுபட்டது போலியானவர்கள் என்பது தெரிய வந்தது.
குமரவேலின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீஸார் அந்த போலி வருமான வரித்துறை கும்பலை தேடி வருகின்றனர்.