பாஜகவின் தமிழக கலைத்துறை செயலாளரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியதாகவும், காவல்துறையினர் காரை மறித்து சோதனை நடத்திய போது மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், இந்த செய்தியை காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், அன்று எனக்கு உடம்பு சரியில்லை. நான் காரை வேகமாக ஓட்டவுமில்லை. என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. பொய்யான செய்திகள் பரவியதற்கு காரணம் பாஜகவில் இருக்கும் சிலர்தான் என கூறியிருந்தார்.
பாஜகவை பற்றி காயத்ரி ரகுராம் பேசியதும் முந்தியடித்துக் கொண்டு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். அன்புள்ள தமிழிசை மேடம். நான் பாஜகவின் உறுப்பினராக சேர்க்கப்பட்டது ஒரு கணினி வாயிலாக. நீங்களாகவே யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது.
நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள்.
உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது என காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.