ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுங்கள் என மத்திய அரசுக்கு ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏக்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் உங்களைவிட எனக்கு அக்கறை அதிகம் உள்ளது என்றும் மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் ஜிகே மணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாநில அரசுக்கே உரிமை உள்ளது என்றும் அது மட்டுமல்ல உள்ளாட்சி அளவில் உள்ள தலைவர்களுக்கே உரிமை உள்ளது என்றும் அப்படி இருக்கும்போது எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் கூறினார்.
மாநில அரசே தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.