தூத்துக்குடியில் எலி கடித்ததால் உடல் நலம் பாதித்த பெண் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் 32 வயதான குருவம்மாள். திருமணமாகாத குருவம்மாள் கடந்த கொரோனா காலம் முதலாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் குருவம்மாளை எலி கடித்துள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனாலும் அவருக்கு சரிவர குணமாகாமல் அலர்ஜி இருந்து வந்துள்ளது.
பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் அங்குள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் குணமாகாததால் குருவம்மாள் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருவம்மாள் அவரது வீட்டில் கை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல்நல பாதிப்பால் விரக்தியில் இருந்த குருவம்மால் கத்தியால் தன்னை தானே கிழித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.