பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த கடந்த 5 மாதங்களில் கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தொடங்கியது.
ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. இருப்பினும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த கடந்த 5 மாதங்களில் மட்டும் 250 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்பதாக தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து துறை சேவை துறை ஆக இருப்பதால் இனி வழக்கமாக பேருந்து இயக்கப்பட்டாலும் நஷ்டமே மிஞ்சும் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.