சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கலந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பரவலாக கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்டா மாவட்டங்களில், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மற்றும் சென்னை புறநகரில் உள்ள பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மிகவும் அவசியமிருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கன மழையை எதிர்கொள்ள மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும், சாலைகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.