விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எனினும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரம் முழுவதும் கோவில்களை திறக்க பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் விஜயதசமி அன்று கோவில்களை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணையை இன்று மேற்கொண்ட உயர்நீதிமன்றம், விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே ஆலோசித்து அறிவிக்கலாம் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.