நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
ஒருவழியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய கையோடு பிரம்மாண்டமாக தனது கட்சி மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். மாநாட்டை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. ஆரம்பம் முதலே விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அடிபோட்டு வந்த நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், கடைசியில் இருவரின் கொள்கையும் வேறு என்பதால் த.வெ.கவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார்.
ஆனால் தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த கட்சியாக நாம் தமிழர் உள்ள நிலையில் விஜய்யின் அரசியல் வருகையால் நாதகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சீமான் “எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது தங்களது ரசிகர்களை சந்தித்துதான் வந்துள்ளனர். ஆனால் நான் திரைத்துறையில் இருந்து வந்து மக்களை சந்தித்து அதன் பிறகுதான் அரசியலுக்கு வந்தேன்.
ஒரு நடிகரை பார்க்க அதிகம் கூட்டம் வருவது சகஜம். அதற்காக வந்த அனைவரும் அவருக்குதான் ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைய வாய்ப்பில்லை. சொல்லப்போனால் விஜய் ரசிகர்கள் சிலரே தேர்தல் வந்தால் எனக்குதான் வாக்களிப்பார்கள்” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K