முக்கிய போட்டிகளை நீக்கிவிட்டு நடத்தப்படும் காமன்வெல்த் போட்டி தேவையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக சில முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சூடுதல், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், ஸ்குவாஷ், ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியாவுக்கு அதிக பதக்கம் தரும் வாய்ப்பு உள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், முக்கிய போட்டிகள் இல்லாத காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது. அனைத்து போட்டிகளையும் கொண்ட காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்த முடியவில்லை என்றால், நடத்த ஒப்புக்கொண்டது ஏன்? வேறு நகரத்திற்கு மாற்றம் செய்ய வழிவகை செய்யாதது ஏன்? இந்த விஷயத்தை இந்தியா தீவிரமாக எடுத்து, கைவிடப்பட்ட அனைத்து போட்டிகளையும் மீண்டும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.