சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டாகி வந்த கருங்காலி மாலை தற்போது அமைச்சர்களிடையேயும் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளது.
இந்து மத சம்பிரதாயத்தில் அணியும் மாலைகளில் ருத்திராட்ச மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை என பல வகைகள் உள்ளன. இதில் சமீப காலமாக கருங்காலி மாலைகள் குறித்த பதிவுகளும், விற்பனையும் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் சேரும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் ஒரிஜினல் கருங்காலி மாலை என ஆயிரங்களில் மாலைகளை விற்பதும் நடந்து வருகிறது.
இந்த கருங்காலி மாலைக்கான டிமாண்டை கண்டு அடுத்து செங்காலி மாலையும் சந்தைகளில் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால் சோதிட சாஸ்திர நிபுணர்கள் கருங்காலி மாலை நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமே தவிர, செல்வ விருத்தி அளிக்காது என்றும் கூறி வருகின்றனர். இந்த கருங்காலி மாலை தற்போது சினிமா, அரசியல் வட்டாரங்களில் அதிகம் புழங்க தொடங்கியுள்ளது.
இன்று சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சக அமைச்சரான கே.என்.நேரு கருங்காலி மாலை ஒன்றை அணிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உண்மையாகவே கருங்காலி மாலைக்கு ஏதாவது சக்தி உள்ளதோ? என்ற விவாதங்கள் எழுந்துள்ள அதேசமயம் திராவிட கட்சியினர் இதுபோன்ற நம்பிக்கைகளை நம்புகின்றனரா என்றும் பலர் கேள்வி எழுப்பி விவாதித்து வருகின்றனர்.