செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஐடி ஊழியர் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை அருகே பெருங்களத்தூரில் நடந்துள்ளதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தை கடக்கும்போது கவனமாக கடக்க வேண்டும் என்றும் குறிப்பாக செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது என்றும் பலமுறை ரயில்வே துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஒருசிலர் செல்போனில் பேசியபடியே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது பெரும் சோகத்துக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பெருங்களத்தூரில் பெண் ஐடி பொறியாளர் ஒருவர் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் கடந்த நிலையில் அவர் மீது அந்தோதியா விரைவு ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் தாரணி சத்தியா என்றும் 23 வயதான இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் சென்னையில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாரணி சத்தியாவின் சடலத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.