வரும் பாராளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ஒவ்வொரு தொகுதியில் ரூ.50 கோடியை பாஜக ஒதுக்கியுள்ளதால் பாகிஸ்தானை சமாளிப்பதைவிட தமிழகத்தில் நியாயமாக தேர்தல் நடத்துவது கஷ்டம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று நாகர்கோவிலில் நடைபெறும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தின் முன்னேற்பாடுகளை கவனிக்க நாகர்கோவில் வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் கூட்டணியாகவும், பேரம் பேசாத கூட்டணியாகவும் எங்கள் கூட்டணி உள்ளது. ஆனால் அதற்கு நேரெதிராக ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, நீதிமன்றம் போன்ற அனைத்திலும் அரசியல் அதிகாரத்தை பாஜக செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். தமிழகத்தில் தேர்தலுகளுக்காக வீதி வீதியாக, வீடு வீடாக பணம் கொடுக்கும் நிலை அதிகரித்து உள்ளது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ.50 கோடி என பாஜகவும் அதிமுகவும் ஒதுக்கி பதுக்கி வைத்துள்ளது. பணபலத்தால் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஆணையம் தான் தோல்வி அடைந்து உள்ளது. இந்தியா பாகிஸ்தான் சண்டையை விட, எல்லை பிரச்சினையை விட தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடத்துவது பெரிய விஷயம்.
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கலாம். கடவுளை வணங்குவதற்கே பொதுமக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் வாக்களிக்க வர மாட்டார்கள். மதசார்பற்ற அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதில் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் உறுதியாக உள்ளது.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.