அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவின் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வந்தனர். மேலும் ஜெ. உருவ சிலையை வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மனைவி, நடிகை காந்திமதி, நிர்மளா பெரியசாமி ஆகியோர் போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த கருத்துக்கு ஜெயக்குமார் அளித்த பதிலில் ”ஜெ.வின் சிலையை மற்றவர்களுடன் ஒப்பிடுபவர்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான்” என ஆவேசமாக பதிலளித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் , ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்ய அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார் என்று அறிவித்துள்ளார்.