மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, அவரின் தோழி வழக்கறிஞர் கீதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெ.வின் தோழியும், வழக்கறிஞருமான கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் ‘ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யவேண்டும். சசிகலா, இளவரசி, அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி, முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், ஜெ.வின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மேலும், ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏனெனில், பதவி, அதிகாரம், சொத்து ஆகியவற்றை அபகரிப்பதற்காக ஜெ. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இந்த வழக்கை இந்திய தண்டனை சட்டம் 327 மற்றும் 304 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன், போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்கவும் உத்தரவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய கீதா ‘நானும் ஜெ.வும் பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக இருக்கிறோம். அவரின் திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரை சிலர் விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால்தான் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன்’ என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜெ.வின் அண்ணன் மகள் அரசியலுக்கு வந்தால் அவருக்கே தன் ஆதரவு என கீதா கூறினார்.