ஜெயலலிதா சிகிச்சை வீடியோ முழுவதும் உள்ளது: சசி குடும்பத்தில் இருந்து குரல்!
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ முழுவதும் உள்ளது: சசி குடும்பத்தில் இருந்து குரல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்க அவரது மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவை எதுவும் வெளிவராதது இந்த மரணத்தில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மரணத்தில் என்ன நடந்தது என்பதை அறியமுடியாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் மரணத்தை சசிகலாவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தினர். அவர்களின் முக்கிய கோரிக்கையாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வைத்தனர். இதற்கு சசிகலா அணியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது எடப்பாடி அணியினர் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் அணியினருடன் இணைய இருப்பதால் சசிகலா குடும்பத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ குறித்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயானந்த் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சசிகலாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆதாரங்களை நீதிபதியிடம் சமர்ப்பிப்போம். அப்படி விசாரணை நடந்தார் பன்னீர்செல்வத்திடமும் எயிம்ஸ் மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெறும். எங்களிடம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன என அவர் கூறினார்.