ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்தவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இன்று காலையிலிருந்து நடந்துவரும் சம்பவங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவுகள் மூலம் தன் கருத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது, 'நடக்கும் சம்பவங்கள் குறித்து எனக்கு தெரிந்த தொடர்புகளை வைத்து பிரதமருடன் பேசியுள்ளேன்.
ஜல்லிக்கட்டுக்காக நீதி கேட்பவர்கள் பொறுமை காப்பது அவசியம்.' என்று பதிவிட்டுள்ளார். மேலும், 'மாண்புமிகு முதல்வருடன் பேசியுள்ளேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் விரைவில் பதில் கூறுவார். உங்களை திருப்திப்படுத்த அவர்கள் தயாராகவே உள்ளனர். பொறுமை காக்கவும்.' என்று கூறியுள்ளார்.