நாத்திகன் என தன்னை பிறர் அழைப்பதை தான் விரும்பவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் தனது நற்பணி மன்ற செயலி அறிமுக விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, மையம்விசில் எனும் செயலியை அவர் அறிமுகம் செய்தார். மேலும், #maiamwhistl, #theditheerpomvaa #vituouscycle #KH என்கிற ஹேஷ்டேக்குகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது நீங்கள் சார்ந்த பிராமண குலத்திற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு புகார் எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
இது தவறான கருத்து.. பிராமண சமூகத்தை நான் தேடிப்போனதே கிடையாது. பாலச்சந்திரன் என்னை அறிமுகப்படுத்தினார் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. சமூகம் பார்த்து நான் யாரிடமும் நட்பு கொள்வது கிடையாது. எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதேபோல், என்னை நாத்திகன் என அழைப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் ஆத்திகர்கள்தான் என்னை அப்படி அழைக்கிறார்கள். அவர்கள் எனக்கு பெயர் வைப்பதை நான் விரும்பவில்லை. நான் நாத்திகன் அல்ல. நான் பகுத்தறிவாளன். அது என் தேடல்” என பதிலளித்தார்.