நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த சில மாதங்களாக அரசியல் செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஒரு செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். 'விசில்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த அப்ளிகேசன் குறித்து கமல்ஹாசன் கூறியபோது, 'உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க யாரும் கிடையாது. அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும். இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல என்று கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த செயலியில் ஒரு குறைபாட்டை பதிவு செய்ய வேண்டும் என்றால் கமல் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். அப்போதுதான் குறைகள் குறித்து பதிவு செய்ய முடியும். உதாரணமாக நீங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் லஞ்சம் வாங்குவதை பார்த்து அதை இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கமல் கட்சியில் உறுப்பினர் இல்லை என்றால் அதை பதிவு செய்ய முடியாது.
எனவே இந்த செயலியில் பொதுநலத்தை விட கமல்ஹாசனின் சுயநலமே அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த செயலியை அறிமுகம் செய்ததன் நோக்கமே அவரது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது மட்டுமே என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். உண்மையிலேயே அவர் பொதுநலத்துடன் இந்த செயலியை அறிமுகம் செய்வதாக இருந்தால் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது எந்த கட்சியிலும் இல்லாமல் நடுநிலையோடு இருப்பவர்களும் தங்கள் புகாரை பதிவு செய்யும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.