கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சிக்கு ஆரம்பத்தில் ஆதரவு இருப்பது போல் தெரிந்தாலும் தற்போது பத்தோடு பதினொன்றாவது கட்சியாகத்தான் இந்த கட்சி இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதிமுக, திமுக இருக்கும் கூட்டணியில் கமல்ஹாசனின் கட்சி இருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சோனியா காந்தியையும் கமல் சமீபத்தில் சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி, கமல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ரிஸ்க்கை காங்கிரஸ் எடுக்குமா? என்பது சந்தேகம் தான்
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த கமல், 'மக்களவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளார். அப்படியென்றால் கமல் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றே தெரிகிறது.
மக்களவை தேர்தலுக்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்பதால் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளையும் கமல் கட்சி எப்படி சமாளிக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்