வன்னியர் சங்கத்தலைவர் குருவின் மறைவிற்குப் பிறகு பாமக தலைமையோடு முரண்பட்ட குருவின் மகன் ராமதாஸின் முத்துவிழாவில் கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
நுரையீரல் திசுப்பை நோய்க் காரணாமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அவரது குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்நிலையில் குருவின் மகளின் ரகசியத் திருமணம் மற்றும் குருவின் மகன் கனலரசனின் பரபரப்பானப் பேட்டி ஆகியவற்றால் பாமகவுக்கும் குரு குடும்பத்திற்கும் சுமூகமான உறவு இல்லை என பாமக தொண்டர்களுக்குத் தெரிய வந்தது. மேலும் குரு குடும்பத்தினர் பாமக வை விட்டு விலகி புதிய வன்னியர் சங்கத்தை உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியன.
இதையடுத்து சில தினங்களுக்கு முன் நடந்த பாமக தலைவர் ராமதாஸ் முத்துவிழாவில் குருவின் மகன் கனலரசன் தனது தாய் சொர்ணலதாவோடு கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. விழாவில் கனலரசன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து குருவின் குடும்பத்துக்கும் பாமக தலைமைக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி பாமக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.