காரைக்காலில் படிப்பு போட்டியில் மாணவனை விஷம் வைத்து கொன்ற சகாயராணி அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் உள்ள நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் – மாலதி தம்பதியினரின் மகன் 13 வயதாகும் பால மணிகண்டன். பால மணிகண்டன் கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
சமீபத்தில் தனது தாய் கொடுத்ததாக வாட்ச்மேன் கொண்டு வந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இதுகுறித்து பள்ளி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குளிர்பானத்தை கொடுத்தது மாலதி இல்லை என்றும், சகாயராணி என்ற பெண் என்றும் தெரிய வந்தது.
இந்த சகாயராணியின் மகளும், இறந்த பால மணிகண்டனும் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள். இந்நிலையில் சகாயராணியை கைது செய்து விசாரித்தபோது அவர் தான் அந்த சிறுவனை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் போலீஸுக்கு அளித்த வாக்குமூலத்தில், தனது மகளை விட அந்த மாணவன் நன்றாக படித்ததால் தனக்கு கோவம் உண்டானதாகவும், அந்த சிறுவனை கொல்ல முடிவு செய்து கடையில் எலி பேஸ்ட் வாங்கி அதை குளிர்பானத்தில் கலந்து வாட்ச்மேனிடம் கொடுத்ததுடன், தான் பால மணிகண்டனின் தாய் என்று சொல்லி அந்த குளிர்பானத்தை பால மணிகண்டனிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
சமீப காலமாக எலி பேஸ்ட்டை எளிதில் வாங்க முடியாத வண்ணம் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ள நிலையில் சிறுவனை கொல்ல சகாயராணி எலி பேஸ்ட் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.