பணமதிப்பிழப்பு வெற்றியடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு கமெண்டில் பதிலளித்துள்ளார் கஸ்தூரி.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று பலர் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
பணமதிப்பிழப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏகப்பட்ட போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை பாகிஸ்தானி அச்சடிக்கப்பட்ட இந்திய நோட்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ”நம்ம நாட்டு நோட்டு அடிக்கிற மெஷின பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் வந்த கோளாறு சரிசெய்யப்பட்டது” என்று கூறியுள்ளார். யார் பாகிஸ்தானுக்கு மிஷினை விற்றார்கள் என்று அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
இந்நிலையில் இந்த ட்வீட்டுக்கு கமெண்டில் வந்து பதில் சொன்ன நடிகை கஸ்தூரி ” நீங்கதான் மெச்சிக்கணும் சார். அந்த மாசம் என் கண்ணெதிரே சில திடீர் பணக்காரங்க உருவானாங்க. நகை விற்பனை அமோகம். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. என் அனுபவத்துல, லஞ்சம், வரி ஏய்ப்பு, cash transaction எல்லாம் 2 மடங்கு ஆயிடிச்சு- 1000 ருபாய் நாட்டுக்கு பதில் 2000 ரூ நோட்டு !” என்று பதிவிட்டுள்ளார்.