கொடநாடு கொள்ளை வழக்கு: தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது!
கொடநாடு கொள்ளை வழக்கு: தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 24-ஆம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு ஜெயலலிதாவின் அறையில் இருந்து முக்கியமான பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்துவிட்டு சென்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் முன்னாள் கர் டிரைவர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் சயனின் ஏற்பாட்டில் 9 பேர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கனகராஜ் விபத்தில் சிக்கி சந்தேகத்துக்குறிய முறையில் இறந்தார். அவரது நண்பர் சயனும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இந்த செயலில் ஈடுபட்ட 9 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாக உள்ள கேரளாவை சேர்ந்த குட்டி என்னும் ஜிஜின் இந்த வழக்கில் முக்கியமான நபர் ஆவார்.
இந்த குட்டி என்னும் ஜிஜின் கள்ளச்சாவிகள் மூலம் பூட்டியவற்றை திறந்து கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர். இவர் தான் ஜெயலலிதாவின் சூட்கேஸ்களை திறந்து கொள்ளையடித்து சென்றிருக்க வேண்டும். கனகராஜ் தற்போது உயிரோடு இல்லாததால் நிலையில் இந்த குட்டி என்னும் ஜிஜினுக்கு தான் என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டன என்ற விபரம் தெரியும்.
இந்நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜிஜின்னை நேற்று தனிப்படை கைது செய்தது. அவரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.