திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டியில் கலைஞர் படம் இடம்பெற்றதால் கழகத்தில் உருவாகியுள்ள சலசலப்பிற்கு கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நாட்காட்டி வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு கலைஞரின் இறப்பை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் நாட்காட்டியில் அவரது படம் சேர்த்து வெளியிடப்பட்டது.
இதனால் கழகத்தின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியடைந்து பல்வேறு கருத்துகளைப் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் இலங்கைப் போர் நிறுத்தத்தில் இலங்கை மக்களுக்கு துரோகம் இழைத்தவர் என்றும் இலங்கைப் போர் நிறுத்தத்திற்காக அதிகளவில் பங்கெடுத்துக்கொண்ட தி.வி.க. கலைஞரின் படத்தோடு நாட்காட்டி வெளியிடுவது இலங்கைத் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதனால் இந்த சர்ச்சிகளுக்கு முடிவு கட்டும் விதமாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘திராவிடர் விடுதலைக் கழகம் ஈழ விடுதலைக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல. தமிழ் மக்களின் சுயமரிதைக்கு சாதி ஒழிப்பிற்கு பெண்ணடிமை ஒழிப்பிற்காக தொடங்கப்பட்ட இயக்கமாகும். அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, செயல்படுத்த, சட்டமாக்க அரசியல் ஆதரவு - எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஓர் இயக்கம். அதன் அடிப்படையில் இயக்கத்தின் தலைமை முடிவு செய்துதான் இந்த நாட்காட்டியின் பக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட இயக்கத்தின் கருத்திற்கு உடன்படாதவர்கள் இயக்கத்திலிருந்து விலகி கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை’ என அறிவித்துள்ளார்.