தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணி மட்டுமே பெரிய கூட்டணியாக இருந்து உள்ளது. இந்த கட்சிகளின் கீழ்தான் மற்ற கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இன்று திடீரென பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் பாஜகவுடன் ஒத்துப்போகும் கட்சிகள் மட்டுமே இந்த கூட்டணியில் இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக தலைமையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது
இந்த நிலையில் விபி துரைசாமியின் கருத்தை பாஜகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றும் எல் முருகன் அவர்கள் கூறும் கருத்து தான் பாஜக கருத்தாக இருக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் விபி துரைசாமி கூறிய கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக மாறி வருவதால் பாஜக vs திமுக என்ற நிலை இருக்கும் என்ற கணக்கில் விபி துரைசாமி கூறினார் என்றும், மேலும் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் என்றும் இந்த கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்