தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ அவற்றை தீர்க்க 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நமது தமிழக வெற்றி கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கை திருவிழாவுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நமது கழகத்தின் சார்பில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில், தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிக தொகுதி பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தற்காலிக பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும், அதை ஒட்டி உள்ள சட்டமன்ற பகுதிகளிலும் மாநாட்டிற்கு வரும் கழக தோழர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.