திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வியாபாரிகளை பிடிக்க போலீஸார் ட்ரோனை பயன்படுத்தியபோது சாராய வியாபாரிகள் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்கும் கும்பல்கள் சில ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மலைப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மலை மேல் சாராயம் காய்ச்சுவதாக கூறப்படும் நிலையில் சோதனைக்கு சென்றால், முன்னதாக மோப்பம் பிடித்து சாராய வியாபாரிகள் தப்பிவிடக் கூடும் என ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.
கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் பறந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். விற்பனைக்கு வைத்திருந்த சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.