தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் இரு கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள ஒரு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனுக்களை திருட முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவாரூர் அருகே வடகண்டம் என்ற ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக வேட்புமனுக்கள் கொடுக்கப்பட்டும் பூர்த்திசெய்யப்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டும் வருகின்றன. இதுவரை 27 வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு உள்ள நிலையில் திடீரென இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரித்தபோது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த வாக்காளர் பட்டியல், காசோலை, அரசு முத்திரைகள் ஆகியவை அருகே இருந்த தொட்டியில் வீசப்பட்ட இருப்பதாகவும் அந்த அலுவலகத்தில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது
மர்ம நபர்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைந்து வேட்புமனுக்களை திருட முயற்சித்ததாகவும், ஆனால் வேட்புமனுக்கள் கிடைக்காததை அடுத்து மற்ற பொருள்களை அவர்கள் ஆத்திரத்தில் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்