அடிப்படை வசதிகளை முழுதாக செய்து முடிக்காத வண்டியூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை கிளை நீதிமன்றம்.
மதுரையில் உத்தங்குடி முதல் கப்பலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் மூன்று சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் மேலும் 3 இடங்களில் புதியதாக சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் பலர் பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளனர். அதில் நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி 27 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுங்க சாவடிகள் அமைக்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளே முடிவுறாத நிலையில் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம் அடிப்படை வசதிகளை, கட்டமைப்புகளை முறையாக முடிக்கும் வரை வண்டியூர் சுங்க கேட்டில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், அதற்கான கட்டணத்தை வேறு எந்த சுங்க கேட்டிலும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.