மதுரையில் திட்டம் போட்டு விளையாட்டு பயிற்சியாளரிடம் வழிப்பறி செய்த ஓட்டுனர், வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஜேபி நகரில் உள்ள பேட்மிட்டன் அகாடமியில் பயிற்சியாளராக இருப்பவர் பாரதிராஜா. சில நாட்கள் முன்பு வீட்டிலிருந்து பயிற்சி மையத்திற்கு சென்ற பாரதிராஜாவை அவனியாபுரம் அருகே மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கேட்டிருக்கின்றனர்.
அவர் தர மறுக்கவே அவரை தாக்கிய திருட்டு கும்பல் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டதுடன், 18 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு அடங்கிய அவரது பர்ஸையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பாரதிராஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆட்டோ ஓட்டுநரான ஒத்தக்கண்ணு மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்டீபன் வர்கிஸ் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ரோட்டில் பாரதிராஜா செல்வதை தொடர்ந்து நோட்டமிட்ட அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை நடத்தியுள்ளனர். இந்த திருட்டு வழக்கில் வர்கிஸ் மனைவியும், வழக்கறிஞருமான ஈஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.