தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை உள்ளபடியே ஆங்கிலத்திலும் எழுத தமிழக அரசு மாற்றங்கள் செய்துள்ள நிலையில் கோவில் பெயர்களையும் தமிழில் மாற்ற ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயரை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் எழுத தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கோவில்கள் மற்றும் அதில் உள்ள இறைவன் மற்றும் இறைவிகள் பெயர் சமஸ்கிருதத்தில் உள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “தமிழகத்தில் சமஸ்கிருதத்தில் உள்ள கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை தமிழில் மாற்ற முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.